Monday 28 February 2011

எங்கே செல்லும் இந்தக் கூட்டம்..................

இன்று மாவட்ட அளவில் நடைபெற்ற ஓர் ஆசிரியர் கூட்டத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. அக்கூட்டம் கிள்ளான் வட்டாரத்தில் புகழ்பெற்ற ஒரு இடைநிலைப்பள்ளியில் நடைபெற்றது. அப்பள்ளியில் அதிக இந்திய மாணவர்கள் பயில்வார்கள் என்று எனக்கு இன்றுதான் தெரிய வந்தது. கூட்டம் ஏறக்குறைய 11 மணியளவில் முடிவடைந்தது. கொஞ்சம் அவரச வேலைகள் இருந்ததால் மற்ற இந்திய ஆசிரியர்களுடன் அளவளாவ நேரம் ஒதுக்காமல் உடனே கிளம்ப வேண்டியிருந்தது. என்னுடன் சில சீன மொழி ஆசிரியர்களும் (பெண்கள் உட்பட ) மலாய் ஆசிரியர்களும் வந்தனர். பள்ளியின் நுழைவாயிலில் நம் இந்திய மாணவர்கள் சிலர் ( ஏறக்குறைய படிவம் 3 அல்லது 4 ) ஆக இருக்க வேண்டும். அவர்கள் உட்கார்ந்த இடமோ பள்ளி வளாகத்திற்குள்ளேயே என்பது குறிப்பிடத்தக்கது. என் முன்னே சென்று கொண்டிருந்த சீன இனத்து ஆசிரியைகளை மிக மோசமாக வருணித்து கிண்டல் அடித்துக் கொண்டிருந்தனர். அதுவும் அவர்களுக்குப் புரியும் வண்ணம் மலாய் மொழியிலேயே கிண்டல் அடித்து தங்கள் 'வீரத்தை' மெய்ப்பித்துக் கொண்டிருந்தனர். பள்ளிச் சீருடையில் இருந்த அவர்கள் இருந்த நிலை 'காலிக் கூட்டம்' பிச்சை எடுக்க வேண்டும்.  என்னைப் பார்த்த அவர்கள், 'டேய் மச்சி... ஒரு கருப்பன் வராண்டா..' என்றனர். ( என்னைவிட மிக மோசமான கருப்பாக அவர்கள் இருந்தனர் என்பது வேறு விடயம் ). நான் அருகில் வந்தவுடன், 'டேய் அங்கிளுக்கு ஒரு ஓ போடுங்க' என்றான் ஒருவன். நண்பர்கள் அனைவரும் ஓ வும் போட்டனர். தங்கள் எதிர்காலத்தில் இவர்கள் வாங்கப்போகும் அந்தப் பெரிய ஓ க்கள் தான் என் ஞாபகத்திற்கு வந்தது. நான் அவர்களைக் கடந்து, பள்ளி வளாகத்தையும் தாண்டி காரை எடுக்கும் போது, ஒருவன் கத்தினார், 'டேய்... வாத்தி... ' என்று. நாய்களுடனும் பன்றிகளுடனும் மோதுவதென்பது எனக்கு எப்போதும்  உடன்பாடான ஒன்றாக இருந்ததில்லை. பேசாமல்..... இந்த எதிர்கால தலைவர் கூட்டம் எங்கே செல்லப் போகிறது என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன். இந்த நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டு, இனி எதிர்காலத்தில் என்ன ஆகுமோ என்று விசனப்படும் தருணங்களில் இவர்களை நினைத்து  வேதனைப்படுவதா.... வெட்கப் படுவதா... இரக்கப்படுவதா... அல்ல... இந்தக் கூட்டம் என்ன ஆனால் நமக்கென்ன என்று சுயநலப் போர்வைகளைப் போர்த்திக் கொள்வதா... என்று புரியாமல் குழம்பிக் கொள்கிறேன்... பள்ளி வளாகத்திலேயே இப்படி என்றால்... வெளியே...!!!!!!!!!. இப்படிப்பட்ட மாணவர்கள் மேல் நடவடிக்கை எடுத்தால், தங்கள் அரசியல் இலாபத்துக்காக போராடும் ஒரு கூட்டம் இவர்களுக்கு வக்காளத்து வாங்கிக் கொண்டு களத்தில் இறங்கும் என்பதும் நாம் அறியாமல் இல்லை.... சரி,,,,, பூனைக்கு மணி கட்டுவது யார் ?????????????
*சிறுகுறிப்பு : ஒரு காலத்தில் கட்டொழுங்கிற்கு மிகவும் புகழ்பெற்ற பள்ளியாம் இது.  இடைநிலைப் பள்ளி மாணவர்கள் எவ்வாறு இருக்க வேண்டுமென்பதற்கு இந்தப் பள்ளி எடுத்துக்காட்டாய் இருந்ததாம். தமிழ்ப்பள்ளி மாணவர்களைச் சேர்க்க ஆரம்பித்த பிறகுதான் இந்தக் கட்டொழுங்குப் பிரச்சினை மோசமாகி விட்டன என்று என்னுடன் வந்த ஒரு மலாய் ஆசிரியர் கூறிக்கொண்டு வந்தார். அவர்கள் பேசிக்கொள்வதை நான் சொன்னவுடன் ஆளுக்கொரு அறை கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். இதெல்லாம் வேண்டாம் என்று நான் அவரை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு சென்று விட்டேன் என்பது கூறக்கூடிய ஒன்றா இல்லையா என்று தெரியவில்லை .

No comments:

Post a Comment