Tuesday, 15 March 2011

விவாகரத்தும் விதண்டாவாதங்களும்

பாகம் 2 :
முதலில் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. தலையிடலாமா வேண்டாமா என்று உள்ளுக்குள் ஆயிரமாயிரம் குழப்ப வினாக்கள் மாறி மாறிப் பாய்ந்து கொண்டிருந்தன. இரண்டு நாள்களுக்குப் பின், அந்தப் பெண்ணின் தந்தை மீண்டும் அழைத்தார். 'சார், பேசினீங்களா... நீங்க சொன்னா அந்தப் பையன் கேட்பான்'. உண்மைதான். நான் சொன்னா, அந்தப் பையன் கேட்பான்தான்.... ஆனால், குடும்ப விஷயமாயிற்றே! தனிப்பட்ட அந்தரங்கமாயிற்றே.. !! மறுநாள், அந்தப் 'பையனின்' தாயார் அழைத்தார். 'கொஞ்சம் பேசிப் பாருங்க சார்.... அந்தப் பொண்ணு ரொம்ப பிடிவாதமா இருக்கு... நாங்களும் எவ்வளவோ பேசிட்டோம்...நீங்க சொன்னா...;. ம்... குழப்பம் பாதம் வரை போய் குடைந்தது. அவமானப்படுவது என்பது என்னைப் பொறுத்தவரையில் தற்கொலை போன்றது. அப்படி ஏதும் நடந்து விட்டால்.....???? மனைவியிடம் இது பற்றிக் கேட்டேன்.. 'பேசித்தான் பாருங்களேன்.. புண்ணியமாய் போகும்' என்றார். பாவமாக ஆகாமல் இருந்தால் சரி!!

இரண்டு நாள்களுக்குப் பிறகு அந்தப் பையனைச் வெளியே சாப்பிடப் போகலாம் என்று அழைத்தேன். ' என்னடா பிரச்சினை? என்றதும் பையன் அடுக்கத் தொடங்கினான்.

* சொன்ன பேச்சைக் கேட்கவே மாட்டேங்குது சார்..
* எங்க போகிறது..என்ன செய்கிறதுனு தெரியல... எதைக் கேட்டாலும் ஒரு முறைப்புதான்.
* வீட்டில் சமைக்கவே மாட்டேங்குது.. கேட்டா போய் கடையில சாப்பிடுங்கனுது
* லீவு விட்டா போதும்... உடனே அம்மா வீடுதான்..எதையும் கேட்க்க் கூடாது.
* சம்பளத்த பத்தி கேட்கவே கூடாது
* எந்த நேரம் பார்த்தாலும் போன்ல தொங்கிக்கிட்டுதான் இருக்கு
* என் துணிகளைக் கூட டோபியிலதான் சார் போடறேன்..
இன்னும் அடுக்கிக் கொண்டே போனார். அதில் சில தனிப்பட்ட அந்தரங்க விஷயங்கள் இருப்பதால், இங்கு தவிர்த்து விடலாம் என்று நினைக்கிறேன்.
'சரி, மூன்று வருடமா காதலிச்ச பிறகுதானே கல்யாணம் பண்ணீங்க'என்றேன்.
'ஆம சார், ... காதலிக்கும் போது இந்தக் கருமம் தெரில.. ஒரே லவ்வு.. என் மேல் பொழிஞ்ச அன்பு இருக்கே.. ... இப்ப தற்கொலை பண்ணிக்கலாம் போல இருக்கு சார்..'
'இப்ப சேர்ந்து வாழனும்னு ஆசை இருக்கா இல்லையா'
'ஆசையில்லாம இருக்குமா சார், ஆனா அது பேய். அதுகூட வாழ முடியாது.. டைவர்ஸ்தான்.. வேறொரு நல்ல பொண்ணா பார்த்து, கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்..'
ம்...எனக்குள் சிரித்துக் கொண்டேன். அவன் திருமணத்திற்கு முன் கூறிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் மோதி விட்டுச் சென்றன. 'ரொம்ப நல்ல பொண்ணு சார். இந்த மாதிரி பொண்ண தேடி எடுத்தாலும் கிடைக்காது..நான் புண்ணியம் செஞ்சிருக்கனும்'
'சரிப்பா, பிறகு சந்திக்கலாம் என்று கூறி, அவனிடம் இருந்து விடை பெற்றேன். இனி, அந்தப் பெண்ணைச் சந்திக்க வேண்டும். பிரச்சினையே இல்ல.. என் அன்புக்குரிய மாணவியரில் ஒருவர் அவர். ஆசிரியர் தினம், பிறந்த நாள் என்று எந்த முக்கிய நாளாக இருந்தாலும் முதலில் வாழ்த்து அனுப்புபவர் அவர். போனில் அழைத்தேன். '..........' உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டுமே என்றேன். சரிங்க சார், ஆனா அவரைப் பற்றி மட்டும் பேசக்கூடாது என்று கேட்டுக் கொண்டார். என்னடா இது...
மறுநாள், அருகாமையில் உள்ள ஒரு புகழ்பெற்ற பேரங்காடியில் சந்தித்தோம். 'காதலிச்சி தானே கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க.. இப்ப என்னா... மூனு வருடம் தானே ஆச்சு.. அதற்குள் வாழ்க்கை கசந்து போச்சா' என்று கேட்டவுடன், அவர் கொட்டியதையும் சொல்ல வேண்டும் அல்லவா..
- தொடரும்

1 comment:

  1. முனியாண்டி ராஜுக்கு,
    சுவாரஸ்யமா இருக்கிறது. தொடர்ந்து எழுதவும்.

    ReplyDelete