Monday, 14 March 2011

விவாகரத்துகளும் விதண்டாவாதங்களும்

பாகம் : 1

அண்மையில் சில தேசியப் பள்ளி தமிழ் மாணவர்களோடு பேசும் வாய்ப்புக் கிடைத்தது. ஏறக்குறைய 200 தமிழ் மாணவர்கள் பயிலும் அந்தப் பள்ளியில், 15 மாணவர்களே தமிழ் மொழியைப் படிப்பதற்குச் சம்மதம் தெரிவித்தனராம்.( POL CLASS ). அந்த தாய்மொழி வகுப்புக்கு சிரமப்பட்டு ஏற்பாடு செய்திருந்த அந்தப் பள்ளி பணியாளரைப் ( Clerk) பாராட்டுவதற்கு இதை விட வேறு இடம் இல்லை. மிகவும் கடினப்பட்டு 15 மாணவர்களைச் சேர்த்தாராம் அவர். பெற்றோர்களில் சிலர், தமிழ் படிக்கக் கூடாதுனுதானே இந்தப் பள்ளியில் போட்டேன் என்று கூட சொன்னதாக கூறினார். உங்களுக்கு இது தேவையில்லாத வேலைனு சொல்லிட்டுப் போனதாகவும் கூறினார். 'என் சாவிலும் தமிழ் தெரியாமல்தான் சாக வேண்டும்' என்ற கொள்கை உடையவர்களாக இருப்பார்களோ என்று நினைத்துக் கொண்டேன். சரி, விடயத்திற்கு வருவோம்.
அன்று மாணவர்களுக்குப் பாடம் கொடுத்துவிட்டு ஒவ்வொரு மாணவராக அழைத்து அவர்களின் வாசிப்பைச் சோதித்துக் கொண்டிருந்தேன். ஒரு மாணவியிடம் ( வயது 9 ) உங்கள் அப்பா பேர் என்னவென்று கேட்டேன். தயவு செய்து எங்கள் அப்பா பெயரைக் கேட்காதீர்கள் என்றது அந்தப் பச்சை மலர். அதிர்ச்சி!!!! ஏம்மா... என்று கேட்ட போது, எங்க அப்பா, அம்மாவை 'டைவர்ஸ்' பண்ணிட்டாரு என்று கூறியது. சரி என்று எத்தனை பேருக்கு அப்பாவைப் பிடிக்கும் என்று கேட்ட போது, ஏறக்குறைய 5 மாணவர்கள் ( 15 மாணவர்களில் )தங்கள் அப்பாவைப் பிடிக்காது என்று கூறினார்கள். ஏன், ஏன்.... எல்லாம் விவாகரத்துச் சம்பவங்கள்தான்....தமிழ்ப்பள்ளி மாணவர்களிடத்தில் இது இல்லை என்று நான் கூறவேவில்லை. இனிமேல்தான் இதைப் பற்றி ஒரு ஆய்வு நடத்த வேண்டும். இந்த விவாகரத்து விடயம் என் மனதை அரித்துக் கொண்டே இருந்தது.

சில நாள்களுக்குப் பிறகு, ஒரு வக்கீல் தோழியிடம் பேச வேண்டியிருந்தது. பேச்சு வாக்கில், இப்பொழுதெல்லாம் கோர்ட் பக்கம் போகவே வெறுப்பாய் இருக்கிறது சார் என்று கூறினார். ஏன்.. என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் இன்னும் ஆழமாய் மனதிற்குள் பாய்ந்து சென்றது. ஒன்னுமில்ல சார், கோர்ட்டுக்குப் போனா, ஒரே டைவர்ஸ் கேஸ்தான்... அதுவும் நம்ம இனம்தான் அதிகம். ரொம்ப வருத்தாமாயிருக்கு.. என்று புலம்பினார். கல்யாணம் ஆகி ஆறு மாதம் கூட ஆகலே... அதற்குள்ள டைவர்ஸ்னு வந்திடறாங்க... கேட்டா மூனு வருடம்.. நான்கு வருடம் காதலிச்சதா சொல்றாங்க.. என்றார். காதலிக்கும் போது பார்க்காதத, கல்யாணத்திற்குப் பிறகு என்ன தான் பார்த்தாங்களோ என்று அலுத்துக் கொண்டார்... என்னதான் காரணம்... புரிந்துணர்வு இல்லையா.. அல்ல... ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் விதண்டாவாதமா... இந்த விடயத்தில் எனக்கும் ஒரு தம்பதியினரின் குடும்ப வாழ்க்கைக்குள் செல்லும் நிலை ஏற்பட்டது. விவாகரத்தின் விளிம்புவரை வந்த அவர்களின் பெற்றோர் என் உதவியை நாடினர். இருவரையும் பேசி, ஒரு நிலைக்கு நான் கொண்டுவர வேண்டுமாம். ஒருவரின் குடும்ப விடயத்தில் தலையிடுவது, அவர்களின் படுக்கையறையை எட்டிப் பார்ப்பது போன்றது என்பது என் கருத்து...அதுவும், இந்தப் பேசி சரி பண்ணும் விடயத்தில் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை. சரி, அவர்களின் விடயத்தை நான் எவ்வாறு அணுகினேன் என்று பிறகு கூறுகிறேன்... அதிலிருந்து நான் பெற்றுக் கொண்ட தகவல்களையும் அப்போது கூறுகிறேன்....

No comments:

Post a Comment