Thursday 24 March 2011

நீ அழைத்தால்............

மனங்கள் முறிந்த பிறகு
மணங்கள் உடைந்து விட்டன....
அட்சதை தூவி ஆசிர்வதித்தது 
அரைநாளில் அஸ்தமனமாய்.....
ஆயிரம் பேர் வாழ்த்தியிருக்கலாம்
ஆலமரமாய் வாழவேண்டுமென 
விவாகத்தை இரத்தாக்கிவிட்டன
வெறும் ஆறு கறுப்பு ஆடைகள்!
பிரிதலில் உனக்கு விருப்பமோ இல்லையோ
அரைமனதோடு போட்ட கையெழுத்து
தலையெழுத்தாய் ஏற்றுக் கொள்ள 
மறுதலிக்கிறது மனம்...இன்னும்!


மூளைக்குள் முட்களைச் செருகியவர்கள்
முணுமுணுக்கிறார்கள் இப்போது
வாழாவெட்டியாம்!
உன் பாதை என் பாதையென
பிரித்துக் கொண்ட பிறகு
அடிக்கடி நடக்கின்றன விபத்துகள்
ரணங்கள் மருந்தைத் தெரியாமல்
இதயமெங்கும்!!
தனிமையின் சதுக்கத்தில்
தண்ணீரெல்லாம் சுடுகிறது இரவில்...
உண்மைதான்
நீ சொன்னது இன்னும் 
செவிகளை ஈரப்படுத்திக் கொண்டே 
இருக்கிறது..
நமது பாதைகள் என்று பிரித்த பிறகு
நாலாந்தர வார்த்தைகள் எல்லாம் 
வாசல் வரைதான் என்றாயே
வரவேற்பறை வரைக்கும் அழைத்து வந்தது
தவறா....தப்பா..
கேட்டிருக்கலாம்..
நீயாவது..
மீண்டும் சொல்லியிருக்கலாம்
தாமரை இலை மேல் தெறித்து விழும் 
நீராய்..... எப்போதாவாது சந்தித்துக் கொள்ளும்
நமது புன்னகைகள் கூட ஒட்டாமல் போகின்றன..
புன்னகையின் பின்னால் இருப்பது புண்கள் என்று
தெரியாதா என்ன..


ஒவ்வொரு ஞாயிறும் வாசலை எதிர்பார்த்து
சனி இரவே விடிந்து விடுகிறது
என் விழிகள்
குழந்தைகள் விட வரும் உன்னிடம் 
மனம் திறந்து பேச மன்றாடுகிறது
காருக்குள் இருந்தே கையசைக்கிறாய்
குழந்தைகளிடம்!
ஓரிரு விரல்கள் மட்டும்
உயிரை உரசி விட்டுப் போகின்றன..
நீ உள்ளுக்குள் வந்தாலும் 
ஒளிந்து கிடக்கும் வார்த்தைகள்
உதட்டை உடைக்கப் போவதில்லை
உன் அம்மா முகம் எனக்கும்
என் அம்மா முகம் உனக்கும் 
இரும்புத் திரையாய் இறங்கியிருப்பதாய்
இருவருமே நினைத்துக் கொள்கிறோம்
குழந்தைகள் புரியாமல் கேட்கின்றன
அடுத்த ஞாயிறு
நீ வருவாயா அம்மா...
அப்பா கேட்கச் சொன்னார்..
சிரித்துக் கொண்டே சிலிர்க்கிறேன் 
உன் அப்பா அழைத்தால்!!!!

2 comments:

  1. Great poem Muniandy, keep writing post in your Facebook. Best wishes.

    ReplyDelete
  2. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete