Monday 28 February 2011

நிறம் ஒன்றுதான்...

உன் நிறமும் என் நிறமும் ஒன்றுதான்
உன் மொழியும் என் மொழியும் ஒன்றுதான்
உன் உணவும் என் உணவும் ஒன்றுதான்
நீ விழுந்தால் என் மனம் துடிக்கிறது..
நீ எழுந்தால் என் மனம் துள்ளுகிறது..
நீ சீண்டப்படும் போது..
நானே சீண்டப்படுவதாய் உணர்கிறேன்..
உன்னைவிட எனக்கு அதிக கோபம் வருகிறது..
உன் இரத்தம் பூமியைத் தொடுவதற்கு முன்னே
ஓடிப்போய் தாங்கலாம் என்று பதறுகிறேன்,..
இன வீறுக்காக பதாகைகளை நீ ஏந்திச்சென்று
விலா ஒடிய உதை வாங்கும்போது
உனக்கு வலிக்கிறதோ இல்லையோ
என் கண்ணீர் வலியைக் கூறுகிறது..
உனக்காக நீ போராடவில்லை என்பது தெரியும்..
எனக்காகவும்தான்!!
தொலைக்காட்சிகளில் உன்னை பெருமையாக
பார்க்கும்போது..
நானும் பெருமைபட்டுக் கொள்கிறேன்..
ஆட்டுக்கடாவுக்காகவும் அரிசிமாவிற்காகவும்
ஓட்டை விற்கும் கூட்டத்தின் மேல்
உனக்கு எப்படி கோபம் வருமோ..
அதுபோல எனக்கும் வருகிறது...
விழிக்கின்றவன் விழியைக் கட்டாயமாய்ப் பறிக்கும்
கொள்கைக் கூத்தாடியின்மேல்
உனக்கு ஏற்படும் ஆதங்கம் போன்றே
எனக்கும் ஏற்படுகிறது...
என்ன செய்ய.....
உன் பிள்ளை மாற்றான் பள்ளியிலும்
என் பிள்ளை தமிழ்ப்பள்ளியிலும் படிப்பதைப் பார்த்து
உன் மேல் என்னால்
கோபபப்படாமல் இருக்க முடியவில்லை..
நீ போர்த்தியிருக்கும் போர்வையைச்
சற்று விலக்காமல் இருக்கவும் என்னால் முடியவில்லை!!!

No comments:

Post a Comment