Friday 25 March 2011

புரியாத சில விசயங்களும் புளித்துப் போன காரணங்களும்

லிபியாவில் ஒரு சொந்த நாட்டு இராணுவமே மக்களைக் குண்டு வீசி தாக்குவதைப் பார்த்து வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை. 30 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி செய்த கடாபியின் கொட்டத்தை அடக்க முடிவு செய்த 'உலக போலிஸ்' அமெரிக்காவைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அதற்கு ஆதரவாக எழுந்த ஐரோப்பா, ஆசிய நாடுகளின் 'மனித தன்மையினையும்' பாராட்டாமல் இருக்க முடியாது. கடாபியின் சர்வாதிகாரத்தை அடக்க இதை விட ஒரு சிறந்த வழியும் இருக்க முடியாது. தொடர்ந்தாற்போல், மூன்று நாள்களாக 350 க்கும் மேற்பட்ட விமானங்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாவம், இந்த நாடுகளுக்கு எவ்வளவு செலவு... உலக மக்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டுமென எண்ணம் கொண்டுள்ள அந்தத் தியாக நாடுகள் உண்மையிலேயே பாராட்டுக்குரியவைதான்.  கடாபி அடங்கும் வரை நாங்கள் அடங்க மாட்டோம் என சூளுரைத்துள்ள அந்த நாடுகளின் தலைவர்கள் எவ்வளவு நல்லவர்கள்! 
நிற்க,
இலங்கையில் நடந்ததற்கும் இப்போது லிபியாவில் நடப்பதற்கும் என்ன வித்தியாசம் ? கடாபியைப் போலத்தான் மகிந்தாவும் தன் சொந்த நாட்டு மக்கள் விமானத் தாக்குதல் நடத்தி படுகொலை செய்தார்???? அதற்கும் மேலாக, அந்த நாட்டுத் தமிழ் மக்களை மிக மோசமான வகையில் கொடுமை படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது எங்கே சென்றன இந்த ஐரோப்ப அமெரிக்க நாடுகள் ??? இந்தியா என்ற தன்மானமற்ற நாடு இவர்களைத் தடுத்ததா ???  தன் நாட்டின் எல்லைப் பகுதியின் ஒரு பகுதியை இன்னும் வைத்திருக்கும் 'அந்த' அண்டை நாட்டிடம் தன் வீரத்தைக் காண்பிக்க முடியாத இந்தியாவா இந்த ஐரோப்பா அமெரிக்க நாடுகளைக் கட்டுப்படுத்தியது ??? 

*** ஒருகால் இந்தத் தமிழர் வாழும் பகுதிகளில் எண்ணெய் வளம் இல்லையா..
*** தனக்கு ஏறக்குறைய எல்லா அரபு நாடுகளும் அடங்கிப் போன பிறகு   
      இன்னும் அடங்காத அந்த லிபியாவைப் போல இலங்கை இல்லையோ..
எது எப்படியோ, புரியாத பல விசயங்களுக்கு விடை தேடிக் கொண்டிருக்கும் இந்த நாடோடிக்கு, இதுவும் புரியவில்லைதான்... யாராவது புரிந்தால் சொல்லுங்கள்...

Thursday 24 March 2011

இன்னும் புரியாத ஒரு வரலாறு....

வரலாறு தெரியுமா இவர்களுக்கு..
குண்டுச்சட்டிக்குள் புகுந்து கொண்டால்
உலகம் என்ன விட்டு விடுமா..
வரலாறுகளுக்குள் வாழ்ந்தே வேராய்
போனார்களாமே..
புராணங்களிலும் வேதங்களிலும் 
புரட்டிப் புரட்டிப் பார்த்தும் 
புரியவில்லை..
எவ்வளவு தூரம் நமக்கும் வரலாறுகளுக்கும்
சரி...
நாய்க்கூண்டில் நுழைந்தால்
கண்டிப்பாய் நாய் போல் குரைக்கத்தான் வேண்டுமா..
வரலாற்றை நினைவுறுத்த வந்தவர்கள்
விரல்களால் கொளுத்துகிறார்கள்..
நாக்கு சுடாதா என்ன??
சார்பு என்று ஆங்கிலேயனை ஒதுக்கிவிட்டால்
வரலாறு செத்து விடுமா..
கருவாடு சுட்ட வரலாறை
இலக்கியங்கள்கூட சொல்கின்றனவே..
கரையோரங்களில் களவு செய்தது
மறந்து போயிருக்கலாம்..
மெர்சிடிஸகளிலும் பி.எம்.டபுள்யுகளிலும்
அந்த ஒத்தைப் படகுகள்
காணாமல்தான் போயிருக்கலாம்...
என்ன செய்வது?
நாகரீகம் என்பது பாடமா என்ன
கற்றுக் கொடுப்பதற்கு?
தொழில்களில்தான் சாதி என்று
சொன்னால் புரியாதுதான்
அதற்காக..
புரியாமல் இருக்கட்டும்..
சுற்று வட்டத்தில் மீண்டும் 
சரித்திரம் எழுதப்படும்போது
புரியட்டும்!!!!!!

நீ அழைத்தால்............

மனங்கள் முறிந்த பிறகு
மணங்கள் உடைந்து விட்டன....
அட்சதை தூவி ஆசிர்வதித்தது 
அரைநாளில் அஸ்தமனமாய்.....
ஆயிரம் பேர் வாழ்த்தியிருக்கலாம்
ஆலமரமாய் வாழவேண்டுமென 
விவாகத்தை இரத்தாக்கிவிட்டன
வெறும் ஆறு கறுப்பு ஆடைகள்!
பிரிதலில் உனக்கு விருப்பமோ இல்லையோ
அரைமனதோடு போட்ட கையெழுத்து
தலையெழுத்தாய் ஏற்றுக் கொள்ள 
மறுதலிக்கிறது மனம்...இன்னும்!


மூளைக்குள் முட்களைச் செருகியவர்கள்
முணுமுணுக்கிறார்கள் இப்போது
வாழாவெட்டியாம்!
உன் பாதை என் பாதையென
பிரித்துக் கொண்ட பிறகு
அடிக்கடி நடக்கின்றன விபத்துகள்
ரணங்கள் மருந்தைத் தெரியாமல்
இதயமெங்கும்!!
தனிமையின் சதுக்கத்தில்
தண்ணீரெல்லாம் சுடுகிறது இரவில்...
உண்மைதான்
நீ சொன்னது இன்னும் 
செவிகளை ஈரப்படுத்திக் கொண்டே 
இருக்கிறது..
நமது பாதைகள் என்று பிரித்த பிறகு
நாலாந்தர வார்த்தைகள் எல்லாம் 
வாசல் வரைதான் என்றாயே
வரவேற்பறை வரைக்கும் அழைத்து வந்தது
தவறா....தப்பா..
கேட்டிருக்கலாம்..
நீயாவது..
மீண்டும் சொல்லியிருக்கலாம்
தாமரை இலை மேல் தெறித்து விழும் 
நீராய்..... எப்போதாவாது சந்தித்துக் கொள்ளும்
நமது புன்னகைகள் கூட ஒட்டாமல் போகின்றன..
புன்னகையின் பின்னால் இருப்பது புண்கள் என்று
தெரியாதா என்ன..


ஒவ்வொரு ஞாயிறும் வாசலை எதிர்பார்த்து
சனி இரவே விடிந்து விடுகிறது
என் விழிகள்
குழந்தைகள் விட வரும் உன்னிடம் 
மனம் திறந்து பேச மன்றாடுகிறது
காருக்குள் இருந்தே கையசைக்கிறாய்
குழந்தைகளிடம்!
ஓரிரு விரல்கள் மட்டும்
உயிரை உரசி விட்டுப் போகின்றன..
நீ உள்ளுக்குள் வந்தாலும் 
ஒளிந்து கிடக்கும் வார்த்தைகள்
உதட்டை உடைக்கப் போவதில்லை
உன் அம்மா முகம் எனக்கும்
என் அம்மா முகம் உனக்கும் 
இரும்புத் திரையாய் இறங்கியிருப்பதாய்
இருவருமே நினைத்துக் கொள்கிறோம்
குழந்தைகள் புரியாமல் கேட்கின்றன
அடுத்த ஞாயிறு
நீ வருவாயா அம்மா...
அப்பா கேட்கச் சொன்னார்..
சிரித்துக் கொண்டே சிலிர்க்கிறேன் 
உன் அப்பா அழைத்தால்!!!!

Wednesday 23 March 2011

சில்லறைக் காசுகளும் சிதறுத் தேங்காய்களும்

கோவில் திருவிழாக்களில்
அந்த
சாமி ஊர்வலம் ரொம்ப பிடிக்கும்
எனக்கு.. என் நண்பர்ளைப் போலவே..
தெருவெங்கும் உடைபடும்
அந்தச் சிதறுத் தேங்காய்களுக்காக
நாங்கள் போட்டியாய்ப் பாய்வதுண்டு..
சில சமயம்
வாய்ச் சண்டையாய்த் தொடங்கி
கைச்சண்டையாய் ஆவதும் உண்டு..
அப்பொழுது எங்களுக்குத் தெரியாது
சண்டையென்றால்
பாராங் வேண்டும் என்று..
சிரிப்புகளிலும் சிலிர்ப்புகளிலும்
சமாதானமாய் ஆன காலங்கள் பல...
இப்பொழுது என்னவோ
அந்தச் சிதறுத் தேங்காய்களைப் பிடிப்பதில்லை..
சில்லறைக் காசுக்களுக்காக
சிதறுத் தேங்காய்களாய்  சிதறிப் போன
எங்கள் தலைவர்களைப் பார்க்கும் போது..
சில்லறைத் தலைவர்களுக்காக
சிதறுத் தேங்காய்களாய் சிதறிப் போன
அந்த தொண்டாகளுக்காகவும்
எனக்குச் சிதறுத் தேங்காய்களைப் பிடிக்காமல் போய்விட்டது..
சுனாமித் தேர்தலில் வெகுண்ட
எங்கள் சிங்கங்கள்..
சுண்டெலிகளாய் சுருண்டு கொள்ளும் போது...
சே..........
அட.....
காசோலைகளில் தான் இருக்கிறது
எங்கள் அரசியல்!!!!!!!!!!!!!!!!!!!!

Tuesday 15 March 2011

விவாகரத்தும் விதண்டாவாதங்களும்

பாகம் 2 :
முதலில் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. தலையிடலாமா வேண்டாமா என்று உள்ளுக்குள் ஆயிரமாயிரம் குழப்ப வினாக்கள் மாறி மாறிப் பாய்ந்து கொண்டிருந்தன. இரண்டு நாள்களுக்குப் பின், அந்தப் பெண்ணின் தந்தை மீண்டும் அழைத்தார். 'சார், பேசினீங்களா... நீங்க சொன்னா அந்தப் பையன் கேட்பான்'. உண்மைதான். நான் சொன்னா, அந்தப் பையன் கேட்பான்தான்.... ஆனால், குடும்ப விஷயமாயிற்றே! தனிப்பட்ட அந்தரங்கமாயிற்றே.. !! மறுநாள், அந்தப் 'பையனின்' தாயார் அழைத்தார். 'கொஞ்சம் பேசிப் பாருங்க சார்.... அந்தப் பொண்ணு ரொம்ப பிடிவாதமா இருக்கு... நாங்களும் எவ்வளவோ பேசிட்டோம்...நீங்க சொன்னா...;. ம்... குழப்பம் பாதம் வரை போய் குடைந்தது. அவமானப்படுவது என்பது என்னைப் பொறுத்தவரையில் தற்கொலை போன்றது. அப்படி ஏதும் நடந்து விட்டால்.....???? மனைவியிடம் இது பற்றிக் கேட்டேன்.. 'பேசித்தான் பாருங்களேன்.. புண்ணியமாய் போகும்' என்றார். பாவமாக ஆகாமல் இருந்தால் சரி!!

இரண்டு நாள்களுக்குப் பிறகு அந்தப் பையனைச் வெளியே சாப்பிடப் போகலாம் என்று அழைத்தேன். ' என்னடா பிரச்சினை? என்றதும் பையன் அடுக்கத் தொடங்கினான்.

* சொன்ன பேச்சைக் கேட்கவே மாட்டேங்குது சார்..
* எங்க போகிறது..என்ன செய்கிறதுனு தெரியல... எதைக் கேட்டாலும் ஒரு முறைப்புதான்.
* வீட்டில் சமைக்கவே மாட்டேங்குது.. கேட்டா போய் கடையில சாப்பிடுங்கனுது
* லீவு விட்டா போதும்... உடனே அம்மா வீடுதான்..எதையும் கேட்க்க் கூடாது.
* சம்பளத்த பத்தி கேட்கவே கூடாது
* எந்த நேரம் பார்த்தாலும் போன்ல தொங்கிக்கிட்டுதான் இருக்கு
* என் துணிகளைக் கூட டோபியிலதான் சார் போடறேன்..
இன்னும் அடுக்கிக் கொண்டே போனார். அதில் சில தனிப்பட்ட அந்தரங்க விஷயங்கள் இருப்பதால், இங்கு தவிர்த்து விடலாம் என்று நினைக்கிறேன்.
'சரி, மூன்று வருடமா காதலிச்ச பிறகுதானே கல்யாணம் பண்ணீங்க'என்றேன்.
'ஆம சார், ... காதலிக்கும் போது இந்தக் கருமம் தெரில.. ஒரே லவ்வு.. என் மேல் பொழிஞ்ச அன்பு இருக்கே.. ... இப்ப தற்கொலை பண்ணிக்கலாம் போல இருக்கு சார்..'
'இப்ப சேர்ந்து வாழனும்னு ஆசை இருக்கா இல்லையா'
'ஆசையில்லாம இருக்குமா சார், ஆனா அது பேய். அதுகூட வாழ முடியாது.. டைவர்ஸ்தான்.. வேறொரு நல்ல பொண்ணா பார்த்து, கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்..'
ம்...எனக்குள் சிரித்துக் கொண்டேன். அவன் திருமணத்திற்கு முன் கூறிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் மோதி விட்டுச் சென்றன. 'ரொம்ப நல்ல பொண்ணு சார். இந்த மாதிரி பொண்ண தேடி எடுத்தாலும் கிடைக்காது..நான் புண்ணியம் செஞ்சிருக்கனும்'
'சரிப்பா, பிறகு சந்திக்கலாம் என்று கூறி, அவனிடம் இருந்து விடை பெற்றேன். இனி, அந்தப் பெண்ணைச் சந்திக்க வேண்டும். பிரச்சினையே இல்ல.. என் அன்புக்குரிய மாணவியரில் ஒருவர் அவர். ஆசிரியர் தினம், பிறந்த நாள் என்று எந்த முக்கிய நாளாக இருந்தாலும் முதலில் வாழ்த்து அனுப்புபவர் அவர். போனில் அழைத்தேன். '..........' உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டுமே என்றேன். சரிங்க சார், ஆனா அவரைப் பற்றி மட்டும் பேசக்கூடாது என்று கேட்டுக் கொண்டார். என்னடா இது...
மறுநாள், அருகாமையில் உள்ள ஒரு புகழ்பெற்ற பேரங்காடியில் சந்தித்தோம். 'காதலிச்சி தானே கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க.. இப்ப என்னா... மூனு வருடம் தானே ஆச்சு.. அதற்குள் வாழ்க்கை கசந்து போச்சா' என்று கேட்டவுடன், அவர் கொட்டியதையும் சொல்ல வேண்டும் அல்லவா..
- தொடரும்

Monday 14 March 2011

விவாகரத்துகளும் விதண்டாவாதங்களும்

பாகம் : 1

அண்மையில் சில தேசியப் பள்ளி தமிழ் மாணவர்களோடு பேசும் வாய்ப்புக் கிடைத்தது. ஏறக்குறைய 200 தமிழ் மாணவர்கள் பயிலும் அந்தப் பள்ளியில், 15 மாணவர்களே தமிழ் மொழியைப் படிப்பதற்குச் சம்மதம் தெரிவித்தனராம்.( POL CLASS ). அந்த தாய்மொழி வகுப்புக்கு சிரமப்பட்டு ஏற்பாடு செய்திருந்த அந்தப் பள்ளி பணியாளரைப் ( Clerk) பாராட்டுவதற்கு இதை விட வேறு இடம் இல்லை. மிகவும் கடினப்பட்டு 15 மாணவர்களைச் சேர்த்தாராம் அவர். பெற்றோர்களில் சிலர், தமிழ் படிக்கக் கூடாதுனுதானே இந்தப் பள்ளியில் போட்டேன் என்று கூட சொன்னதாக கூறினார். உங்களுக்கு இது தேவையில்லாத வேலைனு சொல்லிட்டுப் போனதாகவும் கூறினார். 'என் சாவிலும் தமிழ் தெரியாமல்தான் சாக வேண்டும்' என்ற கொள்கை உடையவர்களாக இருப்பார்களோ என்று நினைத்துக் கொண்டேன். சரி, விடயத்திற்கு வருவோம்.
அன்று மாணவர்களுக்குப் பாடம் கொடுத்துவிட்டு ஒவ்வொரு மாணவராக அழைத்து அவர்களின் வாசிப்பைச் சோதித்துக் கொண்டிருந்தேன். ஒரு மாணவியிடம் ( வயது 9 ) உங்கள் அப்பா பேர் என்னவென்று கேட்டேன். தயவு செய்து எங்கள் அப்பா பெயரைக் கேட்காதீர்கள் என்றது அந்தப் பச்சை மலர். அதிர்ச்சி!!!! ஏம்மா... என்று கேட்ட போது, எங்க அப்பா, அம்மாவை 'டைவர்ஸ்' பண்ணிட்டாரு என்று கூறியது. சரி என்று எத்தனை பேருக்கு அப்பாவைப் பிடிக்கும் என்று கேட்ட போது, ஏறக்குறைய 5 மாணவர்கள் ( 15 மாணவர்களில் )தங்கள் அப்பாவைப் பிடிக்காது என்று கூறினார்கள். ஏன், ஏன்.... எல்லாம் விவாகரத்துச் சம்பவங்கள்தான்....தமிழ்ப்பள்ளி மாணவர்களிடத்தில் இது இல்லை என்று நான் கூறவேவில்லை. இனிமேல்தான் இதைப் பற்றி ஒரு ஆய்வு நடத்த வேண்டும். இந்த விவாகரத்து விடயம் என் மனதை அரித்துக் கொண்டே இருந்தது.

சில நாள்களுக்குப் பிறகு, ஒரு வக்கீல் தோழியிடம் பேச வேண்டியிருந்தது. பேச்சு வாக்கில், இப்பொழுதெல்லாம் கோர்ட் பக்கம் போகவே வெறுப்பாய் இருக்கிறது சார் என்று கூறினார். ஏன்.. என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் இன்னும் ஆழமாய் மனதிற்குள் பாய்ந்து சென்றது. ஒன்னுமில்ல சார், கோர்ட்டுக்குப் போனா, ஒரே டைவர்ஸ் கேஸ்தான்... அதுவும் நம்ம இனம்தான் அதிகம். ரொம்ப வருத்தாமாயிருக்கு.. என்று புலம்பினார். கல்யாணம் ஆகி ஆறு மாதம் கூட ஆகலே... அதற்குள்ள டைவர்ஸ்னு வந்திடறாங்க... கேட்டா மூனு வருடம்.. நான்கு வருடம் காதலிச்சதா சொல்றாங்க.. என்றார். காதலிக்கும் போது பார்க்காதத, கல்யாணத்திற்குப் பிறகு என்ன தான் பார்த்தாங்களோ என்று அலுத்துக் கொண்டார்... என்னதான் காரணம்... புரிந்துணர்வு இல்லையா.. அல்ல... ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் விதண்டாவாதமா... இந்த விடயத்தில் எனக்கும் ஒரு தம்பதியினரின் குடும்ப வாழ்க்கைக்குள் செல்லும் நிலை ஏற்பட்டது. விவாகரத்தின் விளிம்புவரை வந்த அவர்களின் பெற்றோர் என் உதவியை நாடினர். இருவரையும் பேசி, ஒரு நிலைக்கு நான் கொண்டுவர வேண்டுமாம். ஒருவரின் குடும்ப விடயத்தில் தலையிடுவது, அவர்களின் படுக்கையறையை எட்டிப் பார்ப்பது போன்றது என்பது என் கருத்து...அதுவும், இந்தப் பேசி சரி பண்ணும் விடயத்தில் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை. சரி, அவர்களின் விடயத்தை நான் எவ்வாறு அணுகினேன் என்று பிறகு கூறுகிறேன்... அதிலிருந்து நான் பெற்றுக் கொண்ட தகவல்களையும் அப்போது கூறுகிறேன்....