Monday 28 February 2011

நிறம் ஒன்றுதான்...

உன் நிறமும் என் நிறமும் ஒன்றுதான்
உன் மொழியும் என் மொழியும் ஒன்றுதான்
உன் உணவும் என் உணவும் ஒன்றுதான்
நீ விழுந்தால் என் மனம் துடிக்கிறது..
நீ எழுந்தால் என் மனம் துள்ளுகிறது..
நீ சீண்டப்படும் போது..
நானே சீண்டப்படுவதாய் உணர்கிறேன்..
உன்னைவிட எனக்கு அதிக கோபம் வருகிறது..
உன் இரத்தம் பூமியைத் தொடுவதற்கு முன்னே
ஓடிப்போய் தாங்கலாம் என்று பதறுகிறேன்,..
இன வீறுக்காக பதாகைகளை நீ ஏந்திச்சென்று
விலா ஒடிய உதை வாங்கும்போது
உனக்கு வலிக்கிறதோ இல்லையோ
என் கண்ணீர் வலியைக் கூறுகிறது..
உனக்காக நீ போராடவில்லை என்பது தெரியும்..
எனக்காகவும்தான்!!
தொலைக்காட்சிகளில் உன்னை பெருமையாக
பார்க்கும்போது..
நானும் பெருமைபட்டுக் கொள்கிறேன்..
ஆட்டுக்கடாவுக்காகவும் அரிசிமாவிற்காகவும்
ஓட்டை விற்கும் கூட்டத்தின் மேல்
உனக்கு எப்படி கோபம் வருமோ..
அதுபோல எனக்கும் வருகிறது...
விழிக்கின்றவன் விழியைக் கட்டாயமாய்ப் பறிக்கும்
கொள்கைக் கூத்தாடியின்மேல்
உனக்கு ஏற்படும் ஆதங்கம் போன்றே
எனக்கும் ஏற்படுகிறது...
என்ன செய்ய.....
உன் பிள்ளை மாற்றான் பள்ளியிலும்
என் பிள்ளை தமிழ்ப்பள்ளியிலும் படிப்பதைப் பார்த்து
உன் மேல் என்னால்
கோபபப்படாமல் இருக்க முடியவில்லை..
நீ போர்த்தியிருக்கும் போர்வையைச்
சற்று விலக்காமல் இருக்கவும் என்னால் முடியவில்லை!!!

எங்கே செல்லும் இந்தக் கூட்டம்..................

இன்று மாவட்ட அளவில் நடைபெற்ற ஓர் ஆசிரியர் கூட்டத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. அக்கூட்டம் கிள்ளான் வட்டாரத்தில் புகழ்பெற்ற ஒரு இடைநிலைப்பள்ளியில் நடைபெற்றது. அப்பள்ளியில் அதிக இந்திய மாணவர்கள் பயில்வார்கள் என்று எனக்கு இன்றுதான் தெரிய வந்தது. கூட்டம் ஏறக்குறைய 11 மணியளவில் முடிவடைந்தது. கொஞ்சம் அவரச வேலைகள் இருந்ததால் மற்ற இந்திய ஆசிரியர்களுடன் அளவளாவ நேரம் ஒதுக்காமல் உடனே கிளம்ப வேண்டியிருந்தது. என்னுடன் சில சீன மொழி ஆசிரியர்களும் (பெண்கள் உட்பட ) மலாய் ஆசிரியர்களும் வந்தனர். பள்ளியின் நுழைவாயிலில் நம் இந்திய மாணவர்கள் சிலர் ( ஏறக்குறைய படிவம் 3 அல்லது 4 ) ஆக இருக்க வேண்டும். அவர்கள் உட்கார்ந்த இடமோ பள்ளி வளாகத்திற்குள்ளேயே என்பது குறிப்பிடத்தக்கது. என் முன்னே சென்று கொண்டிருந்த சீன இனத்து ஆசிரியைகளை மிக மோசமாக வருணித்து கிண்டல் அடித்துக் கொண்டிருந்தனர். அதுவும் அவர்களுக்குப் புரியும் வண்ணம் மலாய் மொழியிலேயே கிண்டல் அடித்து தங்கள் 'வீரத்தை' மெய்ப்பித்துக் கொண்டிருந்தனர். பள்ளிச் சீருடையில் இருந்த அவர்கள் இருந்த நிலை 'காலிக் கூட்டம்' பிச்சை எடுக்க வேண்டும்.  என்னைப் பார்த்த அவர்கள், 'டேய் மச்சி... ஒரு கருப்பன் வராண்டா..' என்றனர். ( என்னைவிட மிக மோசமான கருப்பாக அவர்கள் இருந்தனர் என்பது வேறு விடயம் ). நான் அருகில் வந்தவுடன், 'டேய் அங்கிளுக்கு ஒரு ஓ போடுங்க' என்றான் ஒருவன். நண்பர்கள் அனைவரும் ஓ வும் போட்டனர். தங்கள் எதிர்காலத்தில் இவர்கள் வாங்கப்போகும் அந்தப் பெரிய ஓ க்கள் தான் என் ஞாபகத்திற்கு வந்தது. நான் அவர்களைக் கடந்து, பள்ளி வளாகத்தையும் தாண்டி காரை எடுக்கும் போது, ஒருவன் கத்தினார், 'டேய்... வாத்தி... ' என்று. நாய்களுடனும் பன்றிகளுடனும் மோதுவதென்பது எனக்கு எப்போதும்  உடன்பாடான ஒன்றாக இருந்ததில்லை. பேசாமல்..... இந்த எதிர்கால தலைவர் கூட்டம் எங்கே செல்லப் போகிறது என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன். இந்த நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டு, இனி எதிர்காலத்தில் என்ன ஆகுமோ என்று விசனப்படும் தருணங்களில் இவர்களை நினைத்து  வேதனைப்படுவதா.... வெட்கப் படுவதா... இரக்கப்படுவதா... அல்ல... இந்தக் கூட்டம் என்ன ஆனால் நமக்கென்ன என்று சுயநலப் போர்வைகளைப் போர்த்திக் கொள்வதா... என்று புரியாமல் குழம்பிக் கொள்கிறேன்... பள்ளி வளாகத்திலேயே இப்படி என்றால்... வெளியே...!!!!!!!!!. இப்படிப்பட்ட மாணவர்கள் மேல் நடவடிக்கை எடுத்தால், தங்கள் அரசியல் இலாபத்துக்காக போராடும் ஒரு கூட்டம் இவர்களுக்கு வக்காளத்து வாங்கிக் கொண்டு களத்தில் இறங்கும் என்பதும் நாம் அறியாமல் இல்லை.... சரி,,,,, பூனைக்கு மணி கட்டுவது யார் ?????????????
*சிறுகுறிப்பு : ஒரு காலத்தில் கட்டொழுங்கிற்கு மிகவும் புகழ்பெற்ற பள்ளியாம் இது.  இடைநிலைப் பள்ளி மாணவர்கள் எவ்வாறு இருக்க வேண்டுமென்பதற்கு இந்தப் பள்ளி எடுத்துக்காட்டாய் இருந்ததாம். தமிழ்ப்பள்ளி மாணவர்களைச் சேர்க்க ஆரம்பித்த பிறகுதான் இந்தக் கட்டொழுங்குப் பிரச்சினை மோசமாகி விட்டன என்று என்னுடன் வந்த ஒரு மலாய் ஆசிரியர் கூறிக்கொண்டு வந்தார். அவர்கள் பேசிக்கொள்வதை நான் சொன்னவுடன் ஆளுக்கொரு அறை கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். இதெல்லாம் வேண்டாம் என்று நான் அவரை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு சென்று விட்டேன் என்பது கூறக்கூடிய ஒன்றா இல்லையா என்று தெரியவில்லை .

Monday 21 February 2011

watch this video

மறக்க..................

கதவுகள் எல்லாம்

அடைக்கப்பட்ட பிறகும்

திருட்டுத்தனமாய்

நுழையும் வெளிச்சம் மாதிரி

நீ

கனவுகளின் இடுக்குகளில்

இன்னும் !



இடுக்கு வெளிச்சங்களில்

நிழல் பார்க்க முடியாதுதான்...

வாசம் கூடவே உணராது!!!

உன் பாதங்களின் அழுத்தங்களை

பாதை

உணராமல் இருக்கலாம்..

மனம் கூடவா ?



இளமை தெருக்களில்

கனவு வளைவுகளை அலங்கரித்த

உன் புன்னகைகள்....

வெளிச்சம் தூவிய

-----உன் பார்வைகள்..

இன்னும் !

Saturday 19 February 2011

ஒடுகளுக்கு வெளியே ...

தொடவும் முடியாமல்..
விடவும் முடியும்
சோம்பேறித் தனமாய் பெய்து கொண்டிருக்கும்
மழை...
குடையை எடுக்க மூன்று முறை
மனம் சிந்திக்கும்......
மழையில் நனைவதைவிட.........
கனவில்
இன்னும் கொஞ்ச நேரம்
தூங்கலாம் என்றால்!!!!!